திருப்பதி ரெயில் நிலையத்தில் பக்தர்களிடம் நகை திருடிய தூத்துக்குடி பெண்கள் 3 பேர் கைது
- திருப்பதி ரெயில் நிலையத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
- நகை, பணம், செல்போன் ஆகியவற்றை இழந்த பயணிகள் திருப்பதி ரெயில்வே போலீசில் புகார் அளித்து வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், வேன், ரெயில் மூலம் வருகின்றனர்.
இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி கும்பல் பயணிகளிடம் பணம், செல்போன் நகைகளை திருடி செல்கின்றனர்.
நகை, பணம், செல்போன் ஆகியவற்றை இழந்த பயணிகள் திருப்பதி ரெயில்வே போலீசில் புகார் அளித்து வந்தனர்.
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருப்பதி ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மீனா (வயது 23), ராணி (29),அஞ்சலி (25) என தெரிய வந்தது.மேலும் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூ.34 ஆயிரம் விலை உயர்ந்த 3 செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்த பணம், செல்போன்களை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் மீது திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.