ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை
- தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
- புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களை வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தடை விதித்தது. அவை பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 98 கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருந்ததி ராயின் 'ஆசாதி', அரசியல் எழுத்தாளர் சுமந்திர போஸ் எழுதிய 'காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ்' உள்ளிட்ட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் உள்துறை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், இந்தப் புத்தகங்கள் ஜம்மு-காஷ்மீர் பற்றிய ஒரு தவறான கதையை பரப்புகின்றன என்றும், அது வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் பங்கேற்பதற்குப் பின்னால் குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல் தொடர்பானது. இந்த விதிகளின் கீழ், இந்த புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.