இந்தியா
பிரதமர் மோடி

கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் வெட்கி தலைகுனியும் செயலை நான் செய்யவில்லை- பிரதமர் மோடி பேச்சு

Published On 2022-05-28 10:50 GMT   |   Update On 2022-05-28 10:50 GMT
பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு, ராஜ்கோட் மாவட்டம் அட்கோட்டில் 200 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மருத்துவமனை சவுராஸ்டிராவில் மருத்துவ வசதியை சிறப்பாக்க உதவும். குஜராத் மாநிலத்தில் தற்போது 30 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

2001-ம் ஆண்டு இங்கு 9 மருத்துவக் கல்லூரிகளே இருந்தது. 1,100 மருத்துவ படிப்பு சீட்டுகளே இருந்தன. இன்று தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் என 30 ஆக உயர்ந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மருத்துவ படிப்புக்கான சீட்டுகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

இன்று நான் குஜராத் மண்ணில் கால் வைத்துள்ளேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு என்னை டெல்லிக்கு வழியனுப்பி வைத்தீர்கள். ஆனால் உங்கள் அன்பு அதிகரித்து வருகிறது.

8 ஆண்டு கால எனது ஆட்சியில் ஒரு தவறு கூட செய்யவில்லை. மக்களை வெட்கி தலைகுனிய வைக்கும் எந்த செயலையும் நான் செய்யவில்லை. நாட்டை முன்னேற்றும் எந்த முயற்சியையும் நான் விட்டு விடவில்லை.

கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி, சர்தார் படேலின் கனவான இந்தியாவை உருவாக்க முயற்சித்தோம். நல்லாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கிறோம்.

பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம்.

கொரோனா பாதிப்பு மற்றும் போருக்கு மத்தியில் நாங்கள் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படியுங்கள்.. பேத்தியை மானபங்கம் செய்ததாக மருமகள் புகார்- துப்பாக்கியால் சுட்டு முன்னாள் மந்திரி தற்கொலை
Tags:    

Similar News