இந்தியா
கரௌலி நகரில் தீ வைப்பு-காவல்துறையினர் குவிப்பு

மத ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பதற்றம்- கரௌலி நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

Published On 2022-04-02 21:42 GMT   |   Update On 2022-04-02 21:42 GMT
அமைதி காக்குமாறு ராஜஸ்தான் மக்களுக்கு மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரௌலி:

ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம்வத்ஸர் விழா நடைபெற்றது. இதையொட்டி கரௌலி நகரில் மத ஊர்வலம் நடைபெற்றது. 

அப்போது மோட்டார் சைக்கிள் பேரணியின் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்தனர்.  

இதையடுத்து அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 

சட்டம் ஒழுங்கை பராமரிக்க உடனடியாக அங்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். கரௌலி நகரம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டது.

இந்நிலையில் கரௌலியில் வெடித்த வன்முறை குறித்து ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநில டிஜிபி எம்.எல். லாதருடன் ஆலோசனை நடத்தினார். 
அமைதியை நிலைநாட்டுமாறு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடையே சமூக விரோதிகளை அடையாளம் காண காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அமைதி காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News