செய்திகள்
பாஜக தலைவர்கள்

எதிர்க்கட்சிகளை சமாளிக்க தயாராக வாருங்கள்... பாஜக எம்.பி.க்களுக்கு கட்சி தலைமை கட்டளை

Update: 2021-11-28 15:43 GMT
பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை  ரத்து செய்யும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. 

குறிப்பாக வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும்படி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்தை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான பாஜக தயாராகி வருகிறது. 

இந்நிலையில், பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பது வழக்கம். ஆனால் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய மந்திரியும், பாஜக மக்களவை குழு துணை தலைவருமான ராஜ்நாத் சிங், மாநிலங்களவை குழு தலைவர் பியூஷ் கோயல், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கியமான பிரச்சினைகளில் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு, பாஜக எம்பிக்கள் அனைவரும் வருகை தருவது முக்கியம் என்று ஜே.பி.நட்டா கூறினார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் பதிலளிக்க கட்சி எம்.பி.க்கள் நன்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,  மத்திய அரசு செய்த நல்ல பணிகளை, குறிப்பாக கடினமான கொரோனா காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முன்னிலைப்படுத்துமாறு எம்.பி.க்களிடம் நட்டா கூறியிருக்கிறார்.

இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது அவசியம் என அனைவரும் வலியுறுத்தினர். பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்  என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார்.
Tags:    

Similar News