செய்திகள்
வெளிநாட்டு பயணிகள்

99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

Published On 2021-11-16 02:11 GMT   |   Update On 2021-11-16 02:11 GMT
இந்தியா வந்ததும் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்காமல், 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி :

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடைவித்தது. 1½ ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தடை தொடர்ந்தது.

இந்த சூழலில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியதை தொடர்ந்து, கடந்த மாதம் 15-ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் இந்திய வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் அப்படி இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் 14 நாட்களுக்கு தங்களை கட்டயமாக தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது.

இதனிடையே உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உலக நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சில நாடுகள் உள்பட 99 நாடுகளில் இருந்து வரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகளை சேர்ந்த முழுமையாக
கொரோனா தடுப்பூசி
செலுத்திக்கொண்ட பயணிகள் இனி தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.

அதே வேளையில் “வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ‘கொரோனா நெகடிவ்’ சான்றிதழ் மற்றும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை மத்திய அரசின் ஏர் சுவீதா இணையத்தளத்தில் பதிவேற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா வந்ததும் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்காமல், 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News