சினிமா செய்திகள்

'பராசக்தி' படத்தில் சிவாஜி புகைப்படத்தை பயன்படுத்துவதா?- வலுக்கும் எதிர்ப்பு

Published On 2026-01-02 08:09 IST   |   Update On 2026-01-02 08:09:00 IST
  • ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.
  • எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் ‘பராசக்தி' படக்குழு உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்த 'பராசக்தி' படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் சிக்கலை கடந்து வந்திருக்கும் 'பராசக்தி' படத்துக்கு இந்த முறை சிவாஜி ரசிகர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'பராசக்தி' படத்தின் பெயரை மீண்டும் அதேபெயரில் எடுக்கவேண்டாம் என்று ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தீ பரவட்டும் என்று சிவாஜியிடம் இருந்து சிவகார்த்திகேயன் தீப்பந்தம் பெறுவது போல ஒரு போஸ்டர் தயாரித்து, அதை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து 'பராசக்தி' படத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்கள். சிவாஜிகணேசன் வாரிசுகளாக பிரபு, அவரைத்தொடர்ந்து விக்ரம் பிரபு இருக்கையில், அவரது வாரிசு என்ற ரீதியில் இப்படி விளம்பரம் தேடிக்கொள்ள யார் அனுமதி கொடுத்தது? எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் 'பராசக்தி' படக்குழு உள்ளது. 'பராசக்தி' பெயரை அபகரித்ததோடு, சிவாஜி புகைப்படத்தை வணிக நோக்கம் மற்றும் சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை அவரது ஆன்மா மன்னிக்காது'', என்று குறிப்பிட்டுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News