செய்திகள்

பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல தேர்தல் கமிஷனின் அனுமதிக்கு நம் வீரர்கள் காத்திருப்பதா? - மோடி ஆவேசம்

Published On 2019-05-12 08:26 GMT   |   Update On 2019-05-12 08:26 GMT
தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்றுதான் நம் வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது ஆகின்ற காரியமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், குஷிநகர் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.

தலித் மக்களின் ரட்சகராக தன்னை காட்டிக் கொள்ளும் மாயாவதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் தலித் இளம்பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட பின்னரும் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துக்கொண்டு, தலித்துகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார் என மோடி குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தான் மாநில அரசும் ‘நடந்தது நடந்து விட்டது’ என்னும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தின்படி இந்த அல்வார் கற்பழிப்பு சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்தது வெட்கக்கேடான சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று இரு பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் மோடி ஏன் பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும்? என்று சிலர் கவலைப்படுகின்றனர்.

ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தங்களை தாக்க வரும்போது அவர்களை சுட்டுக் கொல்வதற்கு எனது வீரர்கள் தேர்தல் கமிஷனின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? எனவும் மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் எதிரே நிற்கிறார்கள். இவன் மீது துப்பாக்கியால் சுடலாமா, வேண்டாமா? என்று தேர்தல் கமிஷனிடமிருந்து எனது வீரர்கள் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா?.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதிகளை களையெடுத்து காஷ்மீரை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. இந்த தூய்மைப் பணியும் எனது பணிகளில் ஒன்றுதான் என மோடி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News