2025 REWIND: நள்ளிரவில் பாகிஸ்தான் மீது பாரிவேட்டை நடத்திய வீர மங்கைகள்
- கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.
புதுடெல்லி:
பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இரவுக் காவலைக் குறிக்கும். காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவல் இருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
இந்தப் பாரி வேட்டையை நினைவுபடுத்துவதுபோல் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தியது குறித்து விவரித்தார்.
அதன்பின், அவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, முதலில் எந்த பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்ன நடந்தது, ராணுவம் என்ன செய்தது, விமானப்படை என்ன செய்தது என விரிவாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தனர்.
இதனால் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இணைய தளங்களிலும் இருவரும் வைரலாகினர்.
யார் இந்த சோபியா குரேஷி?
கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவு அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி, வலுவான ராணுவப் பின்னணியை கொண்டவர். ஐ.நா. அமைதிப் பணிக்கான இந்தியப் படைக்கு தலைமையேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர். புனேவில் நடந்த பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி.
பயோகெமிஸ்ட்ரி முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 1999-ல் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார்.
யார் இந்த வியோமிகா சிங்?
'வியோமிகா' என்ற அவரது பெயரின் அர்த்தம் 'வானத்தில் வசிப்பவள்' என்பது. தனது 6 ஆம் வகுப்பு முதலே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டவர். விமானப் படையில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதில் வியோமிகா தீர்மானமாக இருந்தார்.
இந்திய விமானப் படையில் கடந்த 2019 டிசம்பர் 18-ம் தேதி விமானியாக சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் உயரமான மற்றும் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேட்டக், சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும் பல்வேறு மீட்புப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
பெண்களை சக்தியாகக் கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகாசக்திகளாக தலைமை தாங்கி விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது.
எனவே தான் சோபியா குரேஷியும் வியோமிகா சிங்கும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு அதிகளவு பேசப்பட்டு வருகின்றனர்.