செய்திகள்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திதான் பொறுப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2019-05-10 09:13 GMT   |   Update On 2019-05-10 09:13 GMT
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமரானால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பு என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #NarendraModi #ArvindKejriwal
புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

நாட்டுக்கு எதுவுமே செய்யாத பிரதமர் நரேந்திர மோடியின் தேசபக்தி போலியானது என்று குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், தனது ஆட்சியின் சாதனை என்று கூறிக்கொள்ள மோடியிடம் எதுவுமே இல்லாததால் ராணுவ வீரர்களின் சாகசங்களை எல்லாம் தனது சாதனை என்றுகூறி மக்களிடம் ஓட்டு கேட்கிறார்.

நான் பள்ளிகளை உருவாக்கினேன். மருத்துவமனைகளை அமைத்தேன். மின்சார கட்டணத்தை குறைத்தேன். குடிநீர் திண்டாட்டத்தை தீர்த்து வைத்தேன் என்று கூறிக்கொள்ளும் வகையில் மோடி எதுவுமே செய்யவில்லை.



என்னைப் பொருத்தவரை மோடியைவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆயிரம் மடங்கு மேலானவர். மோடியும் அமித் ஷாவும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். இவர்களை தடுக்க நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிப்போம்.

டெல்லியில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ், கேரளாவில் மா.கம்யூனிஸ்ட், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், டெல்லியில் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாதவாறு காங்கிரஸ் கட்சி இடையில் நின்று குழி பறிக்கிறது.

அவ்வகையில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமரானால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #RahulGandhi #NarendraModi #ArvindKejriwal
Tags:    

Similar News