செய்திகள்

ராம்நாத் கோவிந்த் நியமனம் குறித்து சர்ச்சை பேட்டி - அசோக் கெலாட் ‘பல்டி’

Published On 2019-04-17 22:38 GMT   |   Update On 2019-04-17 22:38 GMT
ஜனாதிபதி நியமனம் குறித்த தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளதாகவும், தான் ஜனாதிபதி பதவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குஜராத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா? என பிரதமர் நரேந்திர மோடி பயந்தார். அதற்கு தீர்வாக ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை நிறுத்தலாம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா யோசனை கூறினார். இதனால் ஜனாதிபதி பதவிக்கு தகுதியான அத்வானியை அவர்கள் ஒதுக்கி விட்டனர். இது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரம். ஒரு கட்டுரையில் படித்ததை கூறுகிறேன்” என்றார்.



இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறுகையில், “அசோக் கெலாட்டின் கருத்து, தலித் சமுதாயத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போது எதிரான மனநிலையை கொண்டுள்ளதை காட்டுகிறது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே அசோக் கெலாட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “ஜனாதிபதி நியமனம் குறித்த தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளது. நான் ஜனாதிபதி பதவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ராம்நாத் கோவிந்தின் எளிமை, பெருந்தன்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பேச்சு சர்ச்சையானதால் அசோக் கெலாட் பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind 
Tags:    

Similar News