செய்திகள்

ரபேல் விவகாரம்- மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

Published On 2019-04-10 05:42 GMT   |   Update On 2019-04-10 05:42 GMT
ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. #RafaleDeal #SC
புதுடெல்லி:

ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் தவறு ஏதும் நடைபெறவில்லை என கூறியது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, ஒரு ஆங்கில பத்திரிகையில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.



அதன்பின்னர் சீராய்வு மனுக்களுக்கு மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரபேல் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதால், தேச பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றனர்.

சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு ஏற்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த ஆவணங்கள் மீது விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். விசாரணை தொடங்கும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர். #RafaleDeal #SC
Tags:    

Similar News