செய்திகள்

இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published On 2019-03-10 15:27 GMT   |   Update On 2019-03-10 15:27 GMT
பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #ParliamentElection #PMModi
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

இந்நிலையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:

ஜனநாயகத்துக்கான தேர்தல் திருவிழா துவங்கியது. 2019 லோக்சபா தேர்தலில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இத்தேர்தல் வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து சாதனையை உருவாக்க வேண்டும்.

பல வருடங்களாக தேர்தல்களை சிறப்பாக நடத்தி வரும் தேர்தல் கமிஷனால் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது. தேர்தலை சிறப்பான முறையில் நடத்த தேர்தல் கமிஷன், அதிகாரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

2019 லோக்சபா தேர்தலை சந்திக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கட்சிகளால் நாம் வேறுபட்டு இருந்தாலும் அனைவரது குறிக்கோளும் ஒன்றே. அது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரமளிக்க வேண்டும் என்பதுதான் என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #PMModi
Tags:    

Similar News