செய்திகள்

சிறுபான்மையினத்தவர்கள் யார்? - தெளிவுப்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

Published On 2019-02-11 20:39 IST   |   Update On 2019-02-11 20:39:00 IST
நமது நாட்டில் சிறுபான்மையினத்தவர்கள் யார்? என்பதை மூன்று மாதங்களுக்குள் தெளிவுப்படுத்துமாறு தேசிய சிறுபான்மையின நல ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. #SCasksNCM #NCMtodefine #defineMinority
புதுடெல்லி:

பா.ஜ.க.வை சேர்ந்த அஷ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். நமது நாட்டில் இந்து மக்கள் பெரும்பான்மையாக அதிக அளவில் வாழ்ந்து வருவதால் இதர மதத்தினரை சிறுபான்மையினத்தவர்களாக கருதி பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சில மாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் 80 முதல் 90 சதவீதம் அளவுக்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு இந்துக்கள் வெறும் 2 முதல் 8 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

எனினும், இங்கெல்லாம் 2 முதல் 8 சதவீதம் அளவில் உள்ள இந்துக்களுக்கு சலுகைகள் கிடைப்பதில்லை. பெரும்பான்மையினத்தவர்கள் என்ற முறையில் இவர்களுக்கான சலுகைகள் புறக்கணிக்கப்படுகிறது.
சிறுபான்மையினத்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள 80 முதல் 90 சதவீதம் மக்கள் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

எனவே, மாநில வாரியாக சிறுபான்மையினத்தவர்கள் யார்? என்பதை அடையாளம் காணும் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இவ்வழக்கின் மனுதாரரான அஷ்வினி உபாத்யாய் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரரான அஷ்வினி உபாத்யாய் இதே கருத்தை முன்வைத்து தேசிய சிறுபான்மையின நல ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவெடித்து அறிவிக்குமாறு தேசிய சிறுபான்மையின நல ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வழக்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SCasksNCM  #NCMtodefine #defineMinority
Tags:    

Similar News