செய்திகள்

உ.பி. முதல் மந்திரியை தொடர்ந்து சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டருக்கும் தரையிறங்க அனுமதி மறுப்பு

Published On 2019-02-06 20:54 IST   |   Update On 2019-02-06 20:54:00 IST
உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து, பா.ஜ.க. தலைவர் சிவராஜ்சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்காள அரசு அனுமதி மறுத்துள்ளது. #MamataBanerjee #ShivrajSinghChouhan
கொல்கத்தா:

வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. இதற்காக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கி வருகின்றனர்.

இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஹராம்பூர், கரக்பூர் ஆகிய இரு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் பஹராம்பூர் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.



இந்நிலையில், கரக்பூர் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில்  சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது மம்தாவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மாநில அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என தெரிவித்தார்.

ஏற்கனவே, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  #MamataBanerjee #ShivrajSinghChouhan
Tags:    

Similar News