செய்திகள்

மாநிலங்களவை நாளைவரை ஒத்திவைப்பு - மக்களவையில் திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு

Published On 2019-02-05 11:33 GMT   |   Update On 2019-02-05 11:54 GMT
கொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முன்வராததை கண்டித்து பாராளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று பாராளுமன்ற இருஅவைகளிலும் எதிரொலித்தது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இவ்விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறாமல் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியபோது மாநிலங்களவையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து  திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கோஷமிட்டனர்.

இதனால், பகல் 12 மணிவரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணிவரையிலும், இறுதியில் நாளை வரையிலும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.


மக்களவையிலும் இன்று இதேநிலை நீடித்தது. கொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரிணாமுல் எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதனால்,  பகல் 12 மணிவரையிலும்,பிற்பகல் 2 மணிவரையிலும், பின்னர் 4 மணிவரையிலும் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். 4 மணிக்கு பின்னர் அவை கூடியபோது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement  
Tags:    

Similar News