செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா தொடர்பான கேள்விகளை தவிர்க்கும் இடைத்தரகர்

Published On 2018-12-29 12:36 GMT   |   Update On 2018-12-29 12:36 GMT
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா காந்தி தொடர்பான கேள்விகளை தவிர்க்க முயற்சிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #ED #ChristianMichel #SoniaGandhi #augustawestland
புதுடெல்லி:

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் கைதான வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.

முன்னதாக, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேலை ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு இடையே வழக்கறிஞரை சந்திக்கும் அனுமதியை பெற்றுள்ள கிறிஸ்டியன் மைக்கேல், இந்த சலுகையை தவறாக பயன்படுத்துவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். குறிப்பாக, சோனியா காந்தி தொடர்பான அதிகாரிகளின் கேள்விகளை தவிர்ப்பது எப்படி? என்று துண்டு சீட்டு மூலம் தனது வழக்கறிஞரிடம் கிறிஸ்டியன் மைக்கேல் ஆலோசனை கேட்பதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இந்த தகவல் ஊடகங்கள் மூலம் இன்று வெளியாக தொடங்கியதும், வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் இத்தாலி பெண்ணான சோனியா காந்தி மற்றும் அவரது மகனான ராகுல் காந்தி ஆகியோர் வசமாக சிக்கியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு செய்துகொண்ட சமரசத்தை இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் செயல்பாடுகள் விளக்குவதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #ED #ChristianMichel #SoniaGandhi #augustawestland
Tags:    

Similar News