செய்திகள்

பா.ஜ.க.வில் தனி மனித ஆதிக்கத்தை எதிர்க்கிறேன் - சத்ருகன்சின்கா

Published On 2018-12-25 11:33 GMT   |   Update On 2018-12-25 11:33 GMT
பாரதிய ஜனதாவில் தனி மனித ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நடிகர் சத்ருகன்சின்கா பேசினார். #ShatrughanSinha #Modi #BJP
திருவனந்தபுரம்:

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பிரதமர் மோடியை பற்றி தனியாக புத்தகம் ஒன்று எழுதி இருந்தார்.

‘முரண்பாடான பிரதமர். மோடியும் அவரது இந்தியாவும்’ என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இதன் வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா எம்.பி.யும், அதிருப்தி தலைவருமான நடிகர் சத்ருகன்சின்கா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

நான் சுயநலத்துக்காக செயல்படுபவன் அல்ல. நான் என் சார்பிலோ அல்லது எனது நலனுக்காகவோ யாரிடமும் எதுவும் கேட்பதுமில்லை. விரும்புவதுமில்லை.

என்னை பொறுத்த வரை தனிப்பட்ட நபரை விட கட்சி முக்கியம். கட்சியின் நலனை விட நாட்டின் நலன் முக்கியம்.

பாரதிய ஜனதாவை பொறுத்த வரை இப்போது தனி மனித ஆதிக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. 2 பேர் கொண்ட படை மட்டும் செயல்படுகிறது. அங்கு ஜனநாயகம் செயல்படவில்லை.

தனி மனிதரின் ஆதிக்கமும், 2 பேர் படையும்தான் நாட்டை நடத்தி கொண்டு இருக்கிறது. இது, என்ன வகையான காட்சி என்று தெரியவில்லை.

தனிப்பட்ட முறையில் நான் மோடியை எதிர்க்கவில்லை. இந்த செயல்பாட்டைத்தான் எதிர்க்கிறேன்.

மோடி ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததை பற்றி மட்டும் நான் பேசவில்லை. மக்கள் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை. வேலை வாய்ப்பு, இப்போது இருப்பதை விட சிறப்பான வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்.

இவ்வாறு சத்ருகன்சின்கா பேசினார்.

விழாவில் பேசிய சசிதரூர், சத்ருகன்சின்கா போன்ற ஹீரோக்கள் காங்கிரசுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது என்று கூறினார். #ShatrughanSinha #Modi #BJP
Tags:    

Similar News