செய்திகள்

சரியான அரசு அமைந்தால் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் - ராகுல் நம்பிக்கை

Published On 2018-12-01 08:56 GMT   |   Update On 2018-12-01 08:56 GMT
இந்தியாவில் வரும் 15-20 ஆண்டுகளுக்கு சரியான அரசு அமைந்தால் சீனாவை நாம் முந்திச் சென்று விடலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #RahulGandhi #surgicalstrike #politicalasset
ஜெய்பூர்:

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் ராணுவ ரீதியான நடவடிக்கையாகும். ஆனால், ராணுவத்தின் பெருமையை சொந்தம் கொண்டாட விரும்பும் நமது பிரதமர் மோடி இந்த தாக்குதலை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார் என ராகுல் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல்கள் மூன்றுமுறை  நடத்தப்பட்டன. இதுபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?. இதை நாங்கள் அரசியலுக்கு பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலின்போது கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் செய்தியாக பரப்பப்பட்டு, பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.



மோடியின் அரசு 15,20 தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதனால், எங்கள் ஆட்சிக்காலத்தில் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளின் இயங்காத பண இருப்பு, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவை மிகப்பெரிய ஊழலாகும். இதன் மூலம் பெரிய நிறுவனங்களுக்கான கதவுகள் திறந்து விடப்பட்டன. சாதாரண மனிதனின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது.

முன்னேற்றத்தில் சீனாவுடனான போட்டியில் நாம் தோற்று விடவில்லை. நமது நாட்டில் திறமை வாய்ந்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு இங்கு சரியான அரசு அமைந்தால் சீனாவை நாம் முந்திச் சென்று விட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். #Modi #RahulGandhi #surgicalstrike #politicalasset

Tags:    

Similar News