செய்திகள்

தெலுங்கானா தேர்தல்: ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி - தெலுங்கு தேசம் வாக்குறுதி

Published On 2018-11-21 13:50 GMT   |   Update On 2018-11-21 13:50 GMT
தெலுங்கானா தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. #TTDPelectionmanifesto #TelanganaAssemblypoll
ஐதராபாத்:

113 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் இன்று மாலை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஐதராபாத் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் எல்.ரமணா இந்த அறிக்கையை வெளியிட்டார்.

2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் மற்றும் குத்தகை விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி. தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த சுமார் 1200 தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 ஏக்கர் நிலம் ஆகியவை அளிக்கப்படும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக 10 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சுழல்நிதி மற்றும் 10 லட்சம் ரூபாய்வரை வங்கிக் கடன், முதியோர், விதவையர், ஆதரவற்றோருக்கு  2  ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், வீடு கட்ட 5 லட்சம் ரூபாய் நிதியுதவி ஆகியவை வழங்கப்படும்.

மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, மேல்நிலை கல்வி, பட்டக்கல்வி, பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு இலவச லேப்டாப், 8-ம் வகுப்பில் இருந்து மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் என பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. #TTDPelectionmanifesto #TelanganaAssemblypoll
Tags:    

Similar News