செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு

Published On 2018-11-17 08:29 GMT   |   Update On 2018-11-17 08:29 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 19-ம் தேதி முறையீடு செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. #Sabarimala #Sabarimalarow #SC
திருவனந்தபுரம்:

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம். இதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்க முடியாது என பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்த அறிவிப்பை சமீபத்தில் அவர் வெளியிட்டார்.

ஆனால், முல்லக்கல் மற்றும் பம்பா பகுதியில் முற்றுகையிட்டுள்ள பக்தர்கள் பெண்களை சபரிமலை பக்கம் செல்ல விடாமல் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்கள் பக்தர்கள் வேடத்தில் சபரிமலை சென்று விடாமல் இருக்க கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், சபரிமலை செல்வதற்காக புனேவில் இருந்து நேற்று விமானம் மூலம் கொச்சி வந்த பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடியவிடிய விமான நிலையத்துக்குள் முடங்கி கிடந்த அந்தப் பெண் புனே நகருக்கு திரும்ப சென்றார்.



இதேபோல்,  இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல வந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் பம்பையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சசிகலாவை கைது செய்தனர்.

இந்து அமைப்பின் தலைவி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 19-ம் தேதி முறையீடு செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  தலைவர் ஏ.பத்மகுமார், ‘வரும் திங்கட்கிழமை எங்களது வழக்கறிஞர் சந்திரா உதய் சிங் இதற்கான மனுவை சுப்ரீம்  கோர்ட்டில் தாக்கல் செய்வார்’ என தெரிவித்துள்ளார். #Sabarimala #Sabarimalarow #SC   
Tags:    

Similar News