கந்தன் மலை திரைப்படம் யூடியூபில் நாளை வெளியீடு - எச்.ராஜா அறிவிப்பு
- திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
- கந்தன் மலை படத்தில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்துத்துவ அமைப்பினர் அண்மையில் பிரச்சனை கிளப்பினர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், கந்தன்மலை திரைப்படம் நாளை (டிசம்பர் 19) தாமரை யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளதாக எச் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.