செய்திகள்

திருப்பதி ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை

Published On 2018-11-14 08:03 GMT   |   Update On 2018-11-14 08:03 GMT
திருப்பதி-தனப்பள்ளி சாலையில் உள்ள ஓட்டலில் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். #Tirupati #TirupatiHotels
திருமலை:

திருப்பதி மாநகராட்சியில் அனுமதியில்லாமல் சிலர் ஓட்டல்கள் நடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் உணவுப்பொருள் கண்காணிப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணாச்சாரி, உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி சேஷாரெட்டி, பறக்கும்படை அதிகாரி ராமசாமி மற்றும் உணவுப் பொருள் ஆய்வாளர்கள் திருப்பதி மாநகராட்சியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், துரித உணவகங்கள், சிற்றுண்டிகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது திருப்பதி- தனப்பள்ளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. அகில இந்திய வானொலி நிலையம் சாலையில் உள்ள பிரியாணி ஓட்டல் ஒன்றில் தரமற்ற இறைச்சி வகைகளை வாங்கி வந்து பிரியாணி தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது. அந்த ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் பிரியாணியில் தரமற்ற இறைச்சி வகைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பதியில் உள்ள பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்ட கேக் வகைகள் தரமற்றதாக இருந்தன. அதனை பரிசோதனைக்காக எடுத்து சென்று ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதி லீலா மகால் சர்க்கிளில் உள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அங்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அலிபிரி போலீசில் ஒப்படைத்தனர்.   #Tirupati #TirupatiHotels
Tags:    

Similar News