'பொருளாதார உத்தி இல்லாத பட்ஜெட்' - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
- அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
- அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளன.
மத்திய அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அதைப் படித்திருந்தால், அதை முழுமையாகத் நிராகரித்துவிட்டு, வழக்கமாக மக்களுக்கு புரியாத வார்த்தைகளை, குறிப்பாக சுருக்கப்பெயர்களை வீசியெறியும் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கிற்குத் திரும்பியதாக தெரிகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல அறிவுசார் வல்லுநர்களால் அடையாளம் காணப்பட்ட குறைந்தது 10 சவால்களை என்னால் எண்ணிச் சொல்ல முடியும். அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. வளர்ந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை, குறிப்பாக சீனாவுடனான வர்த்தகம், இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டின் நிச்சயமற்ற போக்கு மற்றும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிறுவன முதலீடு இவை எதையுமே நிதி அமைச்சரின் உரை கையாளவில்லை.
எனவே, கைதட்டல்கள் கடமைக்காக இருந்ததிலும், பெரும்பாலான பார்வையாளர்கள் விரைவிலேயே அதிலிருந்து கவனத்தைத் திருப்பியதிலும் ஆச்சரியமில்லை. சன்சத் டிவி ஒளிபரப்பு கூட சில முறை துண்டிக்கப்பட்டது. ஒரு கணக்காளரின் தரப்பிலிருந்து பார்த்தால் கூட, 2025-26 நிதி நிர்வாகத்தைப் பற்றிய மிக மோசமான அறிக்கையாகவே இது இருந்தது..." என தெரிவித்துள்ளார்.