இந்தியா

'இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு' - நவீன் பட்நாயக்

Published On 2026-02-01 20:56 IST   |   Update On 2026-02-01 20:56:00 IST
  • மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது
  • பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.

ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

"ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான எனது ஏமாற்றத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன். இந்த பட்ஜெட் ஒடிசா மாநிலத்திற்கும், அதன் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதையும் வழங்கவில்லை.

இரட்டை என்ஜின் அரசு, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று ஒடிசா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத்திற்கு மிகக் குறைந்த அளவே கிடைத்துள்ளது.

ஒடிசாவில் அரிய மண் தாது வழித்தடத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நான் வரவேற்கிறேன். ஒடிசா பல முக்கிய கனிமங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும் தனது வளமான இயற்கை வளங்கள் மூலம் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் எப்போதும் தனது பங்களிப்பை வழங்கும்.

கனிம வளம் நிறைந்த பகுதிகள் மற்றும் தொழில் மையங்களைத் துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிகளை அமைப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது அறிவிக்கப்பட்டதுதான். தற்போது வரை காகித அளவில் மட்டும்தான் இருக்கிறது. களத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. 

ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்கும் அறிவிப்பில் ஒடிசா இடம்பெறாதது ஒடிசா மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒடிசா பாஜக ஏற்கனவே புவனேஸ்வர் மெட்ரோ திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது; மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பது வழக்கம் போல இப்போதும் தொடர்கிறது.

எங்களது டைமண்ட் ட்ரையாங்கிள் உள்ளிட்ட மிக முக்கியமான பல பௌத்தத் தலங்கள் இருந்தபோதிலும், பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.

மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

மாநில பாஜக அரசு ஒடிசா மக்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய நேரமிது; மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் ஒடிசாவும் அதன் மக்களும் இன்னும் சிறப்பான திட்டங்களை பெற தகுதியுடையவர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News