செய்திகள்

சிபிஐ இயக்குனரை நீக்கியது சட்டவிரோதம்- மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

Published On 2018-11-03 10:18 GMT   |   Update On 2018-11-03 10:18 GMT
ஊழல் புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது சட்டவிரோதம் என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டிருப்பதாகவும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். #CBIDirector #AlokVerma
புதுடெல்லி:

சிபிஐ அமைப்பில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் செல்லும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. தற்காலிக இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமனம் செய்யப்பட்டார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா விசாரணை நடத்த தகவல்களை சேகரித்ததால் தான் அவர் பதவி பறிக்கப்பட்டதாக ராகுல் தெரிவித்தார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை காங்கிரஸ் நாடி உள்ளது. காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பும் மத்திய அரசின் முடிவு சட்ட விரோதமானது என்றும், சிபிஐ இயக்குனர் பதவி நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கார்கே கூறியதாவது:-

பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட கமிட்டி மட்டும்தான் சிபிஐ இயக்குனரை நியமிப்பது குறித்தோ, நீக்குவது குறித்தோ முடிவு செய்ய வேண்டும். சிபிஐ இயக்குனரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது சட்டவிரோதம். 

அதுமட்டுமல்லாமல், கமிட்டியில் உள்ள மூன்று பேரையும், அதாவது பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் என்னை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்திருக்க வேண்டும். கமிட்டியின் ஒப்புதல் இல்லாமல் இரவோடு இரவாக அவரை (சிபிஐ இயக்குனர்) காலவரையற்ற விடுப்பில் செல்லும்படி உத்தரவிட்டுள்ளனர். 

இது சிபிஐ சட்ட விதிகளை மீறிய செயலாகும். இந்த விஷயத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பகமும் சட்டத்தை மீறி உள்ளது. இதன்மூலம் தன்னாட்சி அமைப்புகள் மீது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிடுவது தெளிவாகி உள்ளது. அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார். #CBIDirector #AlokVerma
Tags:    

Similar News