2025 REWIND: எம்.எல்.ஏ. டூ Powerful பதவி: யார் இந்த நிதின் நபின்?
- பா.ஜ.க. தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.
- பாராளுமன்றத் தேர்தலால் அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்தும் நீட்டிக்கப்பட்டு வந்தது.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல்இன்று வெளியிடப்பட்டது. இதனால் அனைத்து கட்சி அலுவலகங்களும் பிசியாக இருந்தன.
தனது கட்சி அலுவலகத்துக்குச் சென்ற முனுசாமி, என்னப்பா, நம்ம தொகுதியில எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சிவகுரு, சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டு இருக்காங்க என தெரிவித்தார்.
பரவாயில்லையே, நான் கூட இன்னும் நிறைய இருக்குமோனு நினைச்சேன். இனி வரும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய முடியும். அதனால நமக்கும் நல்ல ஆட்சி கிடைக்கும் இல்லையா என கேள்வி எழுப்பினார் முனுசாமி.
ஆமாம்பா, ரொம்ப கரெக்டா சொன்னே, தேர்தல் ஆணையம் எதை செய்தாலும் நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் பயனே இருக்கு என்றார் சிவகுரு.
ஆமா, சமீபத்தில பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தலைவரை தேர்வு செய்தார்களாமே, யாரு அவரு? என கேட்டார் முனுசாமி.
அவர் நிதின் நபின். பீகாரைச் சேர்ந்தவர் என பதிலளித்த சிவகுரு, நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக செய்யப்பட்டதன் சாராம்சத்தை விவரித்தார். அது பின்வருமாறு:
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.
அவரது 3 ஆண்டு பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. எனினும், பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு புதிய தேசியத் தலைவரை நியமனம் செய்ய அக்கட்சியில் தொடர்ந்து ஆலோசனை நடந்தன.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பா.ஜ.க. தேசியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிதின் நபின் பீகார் மாநில அரசின் சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரியாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.
பாட்னாவில் பிறந்த நிதின் நபின், பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன்.
பங்கிபூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு பீகாரில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன இவர், அதன்பின் 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்க நிதின் நபின் முக்கிய பங்காற்றினார்.
இவர் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுசெயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர் என தெரிவித்தார்.
பரவாயில்லையே, அந்தக் கட்சி மேல எவ்வளவோ சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு தலைவரை தேர்வு செய்யும்போது பிரபலம் இல்லாத ஆளையே நியமனம் செய்வது வரவேற்கத்தக்கது எனக்கூறியபடி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டார் முனுசாமி.