செய்திகள்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி பொதுநல வழக்கு- தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2018-10-26 06:54 GMT   |   Update On 2018-10-26 09:34 GMT
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #TNLocalBodyElections #SupremeCourt
புதுடெல்லி:

தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஜெயசுகின். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட கூடிய மேயர் உள்ளிட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலை கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தி முடித்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடத்தப்படவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு நிர்வகிக்கிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சிறப்பு அதிகாரிகளின் பணியை நீட்டித்து வருகிறது.

தொகுதி வரையறை தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் காரணம் கூறுகிறது.


ஆனால், நிலுவையில் உள்ள இந்த வழக்கிற்கும், தேர்தல் நடத்துவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதன்பின்னரும், இதே காரணத்தை கூறி தேர்தல் நடத்தாமல், மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடிக்கிறது.

மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர், ஒரு பிரமாண மனுவை தாக்கல் செய்தார்.

அதில், உள்ளாட்சி தேர்தலை 2018-ம் ஆண்டு ஜனவரிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், இந்த உத்தரவாதத்தை இதுவரை நிறைவேற்றாமல், அவர் இழுத்தடிக்கிறார். மெத்தன போக்குடன் மாநில தேர்தல் ஆணையம் செயப்பட்டு வருகிறது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல நூறு கோடி ரூபாய் நிதி உதவிகள் கிடைக்காமல் போய் உள்ளது. பல நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளன. எனவே, 10 நாட்களுக்குள் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் லோகு, அப்துல் நஷீர், தீபக் குப்தா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ஆஜராகி, ‘பிரமாண மனுவில் ஜனவரிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் மெத்தனமாக உள்ளன’ என்று கூறினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘பிரமாண மனுவில் உத்தரவாதத்தை குறிப்பிட்டு, கோர்ட்டு தாக்கல் செய்து விட்டு, அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியான நடவடிக்கை இல்லை. பிரமாண மனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாகத்தான் அர்த்தம்.

அதனால், ஏன் உத்தரவாதத்தை அளித்து விட்டு அறை நிறைவேற்றவில்லை? ஏன் பொய்யான உத்தரவாதம் தரப்பட்டது? என்பதற்கு விரிவான பதிலை 4 வாரத்துக்குள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவேண்டும்’ என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.#TNLocalBodyElections #SupremeCourt
Tags:    

Similar News