செய்திகள்

பாலியல் புகார்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு - உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு

Published On 2018-10-22 23:26 GMT   |   Update On 2018-10-22 23:26 GMT
பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். #SupremeCourt #MeToo
புதுடெல்லி:

சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம், புகார் கூறி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாலியல் புகார்களுக்கு ஆளாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் அப்படி புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்குமாறு தேசிய பெண்கள் நல ஆணையத்துக்கு கட்டளையிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் எம்.எல்.சர்மா நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
Tags:    

Similar News