செய்திகள்

என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-10-18 12:23 GMT   |   Update On 2018-10-18 12:23 GMT
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #NDTiwarideath #pmmodi
புதுடெல்லி:

உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்-மந்திரியான என்.டி.திவாரி  காலமானார். அவருக்கு வயது 92. 

ஆந்திர மாநில கவர்னராகவும் பதவி வகித்த என்.டி.திவாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவர் காலமானார். என்.டி.திவாரி  தான் பிறந்த தினமான அக்டோபர் 18-ஆம் தேதியிலேயே காலமானார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவாரி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ என்.டி திவாரி மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். உயரிய தலைவரான என்.டி திவாரி, தனது நிர்வாகத்திறனால் அறியப்பட்டவர். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உத்தரகாண்ட், உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளால் என்.டி திவாரி நினைவு கூறப்படுவார். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தரபிரதேச மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யாநாத், உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #NDTiwarideath #pmmodi
Tags:    

Similar News