செய்திகள்

திருமணமாகாத பெண்களுக்கு கருத்தடை மருந்து வழங்க கூடாது- டெல்லி பா.ஜ.க. தலைவர்

Published On 2018-10-17 09:49 GMT   |   Update On 2018-10-17 09:49 GMT
திருமணம் ஆகாத பெண்களுக்கு கருத்தடை மருந்துகள் வழங்க கூடாது என்று டெல்லி பா.ஜ.க. தலைவர் பிரவீன் கபூர் கூறி இருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. #BJP
புதுடெல்லி:

பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரவீன் கபூர், மத்திய சுகாதார மந்திரி ஜெ.பி. நட்டா, பெண்கள் குழந்தைகள் நல மந்திரி மேனகாகாந்தி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சமீப காலமாக எப்.எம். ரேடியோவில் கருத்தடை சாதனம் குறித்து விளம்பரங்கள் வருகின்றன. அதில் குறிப்பிட்ட ஊசி மருந்தை பயன்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர்.

இதுபோன்ற விளம்பரங்களால் திருமணம் ஆகாத பெண்களையும் தவறான வழிகளுக்கு இழுத்து செல்லும் நிலை ஏற்படலாம்.

இது, அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன் சுகாதாரத்தையும் பாதிக்கும் செயலாக அமைந்து விடும்.

மேலும் பெண்களை வைத்து தவறான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இது உதவும் வகையில் அமைந்து விடும். இதன் காரணமாக பல்வேறு இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, கருத்தடை சாதன விவகாரத்தில் மத்திய அரசு சில பாதுகாப்பு அம்சங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமே கருத்தடை மருந்துகள் வழங்குவதற்கு விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

திருமணம் ஆகாத பெண்கள் இவற்றை வாங்கி பயன்படுத்தாத முறையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கருத்தடை மருந்துகள் எளிதாக கிடைக்கும் போது அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. அதற்கு இடம் அளிக்க கூடாது.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.

திருமணம் ஆகாத பெண்களுக்கு கருத்தடை மருந்துகள் வழங்க கூடாது என்று அவர் கூறி இருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. #BJP
Tags:    

Similar News