கிரிக்கெட் (Cricket)

பிக் பாஷ் லீக்: சேசிங்கில் சாதனை படைத்த பிரிஸ்பேன் ஹீட்

Published On 2025-12-20 03:07 IST   |   Update On 2025-12-20 03:07:00 IST
  • டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 257 ரன்கள் குவித்தது.

பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது.

பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் பின் ஆலன் 79 ரன்னும், கூப்பட் கனோலில் 77 ரன்னும் அடித்தனர்.

பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோ கோல்டன் டக் அவுட்டானார்.

அடுத்து இணைந்த ஜாக் வைல்டர்முத்-மேட் ரென்ஷா ஜோடி அதிரடியாக ஆடியது.

பெர்த் அணியின் பந்துவீச்சை இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 212 ரன் சேர்த்த நிலையில் ரென்ஷா 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் தனது பங்குக்கு 28 ரன்கள் அடித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.

இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஜாக் வைல்டர்முத் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதன்மூலம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் படைத்துள்ளது.

Tags:    

Similar News