செய்திகள்

கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Published On 2018-10-14 08:59 GMT   |   Update On 2018-10-14 08:59 GMT
கல்லீரல் நோய் பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதம் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
புதுடெல்லி:

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
 
அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் உடனடியாக கோவா திரும்புவாரா? அல்லது, சில நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பாரா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.  #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
Tags:    

Similar News