செய்திகள்

டுவிட்டரில் டிரென்ட் ஆகிவரும் மிடூ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

Published On 2018-10-12 09:09 GMT   |   Update On 2018-10-12 09:09 GMT
பிரபலங்களுக்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கும் #MeToo இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். #RahulonMeToo #MeToo
புதுடெல்லி:

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்  #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் டுவிட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர்.

அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த  #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், முன்னர் பிரபல பத்திரிகையாளராக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.


இந்நிலையில், இந்த இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘பெண்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்பதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இதை ஏற்காதவர்களுக்கான இடைவெளி குறுகி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவையான மாற்றத்தை உருவாக்க உண்மைகள் தெளிவாகவும், உரக்கவும் உரைக்கப்பட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #RahulonMeToo #MeToo
Tags:    

Similar News