ஆந்திராவில் லாரி மீது கார் மோதி விபத்து - என்ஜினீயரிங் மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு
- டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
- 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரி பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கனப்பவரம் என்னும் இடத்தில் புதிய டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் விட்டம்ராஜூ பள்ளி அருகே நடைபெறும் படிபூஜையில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்று வேகமாக சென்றது. காரில் 6 பேர் இருந்தனர்.
டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரிலிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் செல்லும் வழியிலேயே இறந்தார். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான 5 பேரும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த வாசு, மகேஷ், ஸ்ரீகாந்த், ராமிரெட்டி, யஷ்வந்த் சாயி என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தனர். 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.