செய்திகள்

4 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் - அமித்ஷாவுக்கு கூடுதல் பாதுகாப்பு

Published On 2018-09-28 09:23 GMT   |   Update On 2018-09-28 09:23 GMT
நான்கு மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #AmitShah
புதுடெல்லி:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

அமித் ஷாவுக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எப்போதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

தற்போது அவருக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


அதில், “அமித்ஷாவுக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு படையினருடன் மாநில போலீசாரும் இணைந்து பணியில் ஈடுபட வேண்டும். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு முன்னதாகவே நேரில் சென்று பார்வையிட்டு தீவிர சோதனை நடத்த வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு படையினரின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது விழா நிகழ்ச்சிகளில் இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. #BJP #AmitShah
Tags:    

Similar News