செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் - பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு சோனியா மருமகன் மறுப்பு

Published On 2018-09-26 22:16 GMT   |   Update On 2018-09-26 22:16 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு சோனியா காந்தியின் மருமகன் மறுப்பு தெரிவித்துள்ளார். #RafaleDeal #RobertVadra #BJP
புதுடெல்லி:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான நிறுவனத்தை பங்குதார நிறுவனமாக சேர்த்துக்கொள்ள பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுத்து விட்டதால்தான், அந்த பேரத்தை காங்கிரஸ் அரசு முறித்துக்கொண்டதாக பா.ஜனதா சமீபத்தில் குற்றம் சாட்டியது.



இதற்கு ராபர்ட் வதேரா நேற்று மறுப்பு தெரிவித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

பா.ஜனதா கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு எதிராக அடிப்படையற்ற அரசியல் அவதூறுகளை பரப்பி வருகிறது. எனக்கு தொடக்கத்தில் அது வியப்பாக இருந்தது. ஆனால், இப்போது அது முழுமையான கேலிக்கூத்தாக தோன்றுகிறது.

ஏனென்றால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு என எந்த பிரச்சினையில் நெருக்கடியில் சிக்கினாலும், பா.ஜனதா எனது பெயரை இழுத்து வருகிறது.

அதிலும், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது. பொய்களின் பின்னால் ஒளிந்து கொள்வதை பா.ஜனதா நிறுத்த வேண்டும். அவர்கள் திரும்பத்திரும்ப சொல்வதை கேட்டு மக்கள் வெறுத்துப்போய் விட்டனர்.

அதற்கு பதிலாக 56 அங்குல மார்பை நிமிர்த்திக்கொண்டு, இந்த விவகாரத்தில் உண்மையை சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் அரசு நடந்தபோது, அந்த அரசு துணிச்சலாக செயல்பட வேண்டும் என்ற பொருளில், ‘56 அங்குல மார்பு வேண்டும்’ என்ற சொற்றொடரை நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். அதை சுட்டிக்காட்டும் வகையில், அதே சொற்றொடரை ராபர்ட் வதேரா பயன்படுத்தி உள்ளார்.  #RafaleDeal #RobertVadra #BJP
Tags:    

Similar News