என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் போர் விமான ஒப்பந்தம்"

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு சோனியா காந்தியின் மருமகன் மறுப்பு தெரிவித்துள்ளார். #RafaleDeal #RobertVadra #BJP
    புதுடெல்லி:

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான நிறுவனத்தை பங்குதார நிறுவனமாக சேர்த்துக்கொள்ள பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுத்து விட்டதால்தான், அந்த பேரத்தை காங்கிரஸ் அரசு முறித்துக்கொண்டதாக பா.ஜனதா சமீபத்தில் குற்றம் சாட்டியது.



    இதற்கு ராபர்ட் வதேரா நேற்று மறுப்பு தெரிவித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு எதிராக அடிப்படையற்ற அரசியல் அவதூறுகளை பரப்பி வருகிறது. எனக்கு தொடக்கத்தில் அது வியப்பாக இருந்தது. ஆனால், இப்போது அது முழுமையான கேலிக்கூத்தாக தோன்றுகிறது.

    ஏனென்றால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு என எந்த பிரச்சினையில் நெருக்கடியில் சிக்கினாலும், பா.ஜனதா எனது பெயரை இழுத்து வருகிறது.

    அதிலும், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது. பொய்களின் பின்னால் ஒளிந்து கொள்வதை பா.ஜனதா நிறுத்த வேண்டும். அவர்கள் திரும்பத்திரும்ப சொல்வதை கேட்டு மக்கள் வெறுத்துப்போய் விட்டனர்.

    அதற்கு பதிலாக 56 அங்குல மார்பை நிமிர்த்திக்கொண்டு, இந்த விவகாரத்தில் உண்மையை சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மன்மோகன் சிங் அரசு நடந்தபோது, அந்த அரசு துணிச்சலாக செயல்பட வேண்டும் என்ற பொருளில், ‘56 அங்குல மார்பு வேண்டும்’ என்ற சொற்றொடரை நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். அதை சுட்டிக்காட்டும் வகையில், அதே சொற்றொடரை ராபர்ட் வதேரா பயன்படுத்தி உள்ளார்.  #RafaleDeal #RobertVadra #BJP
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. #RafaleDeal #KapilSibal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை மோடி அரசு வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ரகசியம் ஆகும். எனவே இதை பகிரங்கமாக வெளியிட இயலாது’ என்று மறுத்து வருகிறது.



    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு இருக்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.

    போர் விமானத்தின் தயாரிப்பு தொழில்நுட்பம் தொடர்பாக நாங்கள் கேள்வி எதையும் கேட்கவில்லை. எதன் அடிப்படையில் முன்பு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விட மும்மடங்கு விலைக்கு வாங்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை அறிந்துகொள்ளவே விரும்புகிறோம். 2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் இத்தொகை 2016-ம் ஆண்டில் ரூ.1,600 கோடியாக அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரபல வக்கீல்களான நீங்களும்(கபில்சிபல்), ப.சிதம்பரமும் இது தொடர்பாக கோர்ட்டுக்கு ஏன் செல்லக்கூடாது?... என்ற நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “இப்பிரச்சினையில் மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் கிடைக்கும் வரை கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஆவணங்கள் எங்களது கைகளுக்கு வந்தவுடன் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்” என்று குறிப்பிட்டார்.  #RafaleDeal #KapilSibal 
    ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உச்ச அதிகாரம் கொண்ட தலைவரின் கைப்பாவைகள் மிரட்டல் விடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு எதிராக காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசுகையில், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் பொய் சொல்கிறார்கள் என்றார். 

    ஒப்பந்த விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை குறிப்பிட்டு, ரபேல் போர் விமானங்களை பராமரிக்க மோடியின் நண்பருக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.



    இவ்விவகாரத்தில் அரசை கார்னர் செய்யும் காங்கிரஸ், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “ரபேல் போர் விமானம் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு பின்வாங்குங்கள், இல்லையெனில் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று உச்ச தலைவரின் கைப்பாவைகளிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

    சில தைரியமான செய்தியாளர்களால் நான் மிகவும் பெருமையடைகிறேன், அவர்கள் இன்னும் உண்மையை சார்ந்து நிற்க வேண்டும், மிஸ்டர் 56 இஞ்ச்க்கு எதிராக நிற்க வேண்டும் என்பதில் தைரியமாக உள்ளனர்” என மோடியை மறைமுகமாக தாக்கி ட்வீட் செய்துள்ளார்.
    ×