செய்திகள்

ரபேல் விவகாரம்: பிரதமரின் பொய்களை மறைக்க போட்டி போடும் மத்திய மந்திரிகள் - காங்கிரஸ் தாக்கு

Published On 2018-09-23 18:55 GMT   |   Update On 2018-09-23 18:55 GMT
ரபேல் போர் விமான விவகார சர்ச்சையில், பிரதமரின் பொய்களை மறைக்க மத்திய மந்திரிகள் போட்டி போடுவதாக காங்கிரஸ் கட்சி கூறியது. #Rafale #Congress #AnandSharma #Modi
புதுடெல்லி:

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரபேல் போர் விமான பேரத்தில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) இந்தியாவில் 108 போர் விமானங்களை தயாரிப்பதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்டது.

ஆனால், பா.ஜனதா ஆட்சியில், எச்.ஏ.எல்.-ஐ விலக்கி விட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியை சேர்த்துள்ளனர். பிரான்ஸ் அரசோ அல்லது விமானம் தயாரிக்கும் டசால்ட் ஏவியேசன் நிறுவனமோ, எச்.ஏ.எல்.-ஐ ஒதுக்கச் சொன்னார்களா?



யாருக்குமே தெரியாமல், இந்த மாற்றத்தை செய்துள்ளனர். இந்திய விமானப்படையையோ, ராணுவ மந்திரியையோ கலந்து பேசாமல், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்பதைக்கூட அருண் ஜெட்லியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி, பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அதற்கு முன்பு, மார்ச் 28-ந் தேதிதான், அனில் அம்பானியின் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

மேலும், விமானத்தின் விலையையும் ஒரு விமானத்துக்கு ரூ.1,670 கோடியாக உயர்த்தி உள்ளனர். இவற்றுக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ராணுவ மந்திரியோ, நிதி மந்திரியோ சொல்லத் தேவையில்லை. பிரதமரின் பொய்கள் அம்பலமாகி விட்டதால்தான் அவர் மவுனம் காக்கிறார். அவர் தப்ப முடியாது.

நூற்றாண்டு கால மிகப்பெரிய ஊழல், ரபேல் போர் விமான ஊழல் ஆகும். இந்த ஊழலை மூடி மறைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிக்கப்படும்.

பிரதமரின் பொய்களை மூடி மறைப்பதற்காக, எச்.ஏ.எல். நிறுவனம் போர் விமானம் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தை இழிவுபடுத்தி விட்டார். இந்த விமானங்களை தயாரிக்கும் திறன் பெற்ற ஒரே நிறுவனம், எச்.ஏ.எல். மட்டுமே.

இந்த விவகாரத்தில், அவர் மட்டுமின்றி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் பிரதமரின் பொய்களை மறைக்க ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். திரும்பத்திரும்ப பொய் சொல்கிறார்கள். இது, இந்த அரசின் இயல்பை காட்டுகிறது.

இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார். #Rafale #Congress #AnandSharma #Modi

 
Tags:    

Similar News