2025 REWIND: தமிழ்நாட்டின் பொறியியல் திறமையை எடுத்துக்காட்டும் பாம்பன் புதிய பாலம்
- இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
- கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.
தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.
ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.
1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும்.
இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.
ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வந்தனர்.
இதனிடையே, பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.
இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிரதமர் மோடி இந்த பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான புதிய ரெயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், இந்தியாவின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றான பாம்பன் புதிய ரெயில் பாலம், தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றுப் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளது. 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரெயில் பாலத்தின் வாரிசாக, புதிய தலைமுறையினருக்கு தமிழ்நாட்டின் பொறியியல் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இப்புதிய பாலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.