செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை முதலில் கவனியுங்கள் - பிரதமருக்கு, நவீன்பட்நாயக் பதிலடி

Published On 2018-09-23 05:13 GMT   |   Update On 2018-09-23 05:13 GMT
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மக்களிடையே துன்பத்தை ஏற்படுத்தி உள்ளதால், முதலில் அதில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி ஊழல் புகாருக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்தார். #NaveenPatnaik
புவனேஸ்வரம்:

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இடங்களில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது ஒடிசா அரசையும், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பேசும் போது, ஒடிசாவில் அரசு பணிகளை செய்வதற்கு கமி‌ஷன் கலாசாரம் அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக பல்வேறு திட்டங்களும் தாமதமாகி முடங்கி கிடக்கின்றன. மாநில அரசு ஊழலில் திளைத்துள்ளது. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த அக்கறை காட்டுவதில்லை என்று பிரதமர் கூறினார்.

இதற்கு நவீன் பட்நாயக் பதில் அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:-


பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒடிசா அரசு மீது ஊழல் புகார்களை கூறி இருக்கிறார்.

உண்மையிலேயே ஊழல் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அவர் ஆய்வு செய்து பார்க்கட்டும் உச்வாலா திட்டம், ஸ்கில் மி‌ஷன் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நினைத்தால் ஆய்வு மேற்கொள்ளலாம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஸ்மேன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விட ஒடிசா அரசு ஏற்கனவே சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள். மத்திய அரசு ரூ.5 லட்சத்துக்கு தான் காப்பீடு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு ரூ.7 லட்சம் காப்பீடு வழங்குகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டத்தை விட மாநில திட்டத்தில் கூடுதலாக 25 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் இதை நாங்கள் பின்பற்றுகிறோம்.

எங்கள் அரசு மீது வேண்டும் என்றே பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

முதலில் மத்திய அரசு அதை முக்கிய பிரச்சினையாக எடுத்து கவனம் செலுத்தட்டும்.

இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #PetrolDieselPriceHike #OdishaCM #NaveenPatnaik #PMModi
Tags:    

Similar News