செய்திகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை - மல்லிகார்ஜூன கார்கே

Published On 2018-09-14 06:40 GMT   |   Update On 2018-09-14 06:40 GMT
கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். #BJP #Congress #JDS

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்கிறார் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் ஆரூடம் கூறி வருகிறார்கள். இது பாரதிய ஜனதாவினரின் பகல் கனவாகும். பாரதிய ஜனதாவின் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது. காங்கிரஸ் கட்சியில் ஜார்கிஹோளி சகோதரர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும், இது குறித்து ஜார்கிஹோளி சகோதர்களிடம் விவரங்களை விசாரித்து அறிவேன்.

கர்நாடகத்தில் தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்து தெரிந்து கொண்டுள்ளேன். ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை. ஜார்கிஹோளி சகோதரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். ஜார்கிஹோளி சகோதரர்கள் பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார்கள். எனவே அவர்களால் கட்சிக்கு தொந்தரவு என்று கூறுவதை ஏற்க முடியாது. இதனால் காங்கிரசில் ஏதாவது பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தால் ஜார்கிஹோளி சகோதரர்களுடன் கலந்தா லோசிப்பேன். எனவே இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன் என்றார்.


கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமையில்லாததால் ஆட்சி விரைவில் கவிழும் என்றார் முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, முதல்வர் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. இதனால் ஆட்சி விரைவில் கவிழும் நிலையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். எடியூரப்பா மீண்டும் முதல்வராவதற்கான காலம் கனிந்துள்ளது. அவருக்கு மக்களிடம் ஆதரவு உள்ளது. பின்கதவு வழியாக ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் குமாரசாமி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மக்கள் வேதனை அடைந்து, மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள் விரும்பும் மாற்றத்தை விரைவில் பாரதிய ஜனதா கொண்டு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #Congress #JDS

Tags:    

Similar News