மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம்: வங்கதேசத்தில் நீடிக்கும் பதற்றம்
- சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த ஹாதி கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
- இதனால் கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது.
டாக்கா:
வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் வரும் 2026 பிப்ரவரியில் நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட இருந்தார்.
கடந்த 12-ம் தேதி பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற ஹாதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த ஹாதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது. ஹாதியின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தக் கோரி நடக்கும் இப்போராட்டம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியாவுக்கும் எதிரானதாகவும் நடந்து வருகிறது. ஹசீனா ஆதரவு பத்திரிகைகள், ஊடக அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் வன்முறையால் கடந்த 2 நாளாக தலைநகர் டாக்காவில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாதியின் உடல் டாக்காவுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று அவரது இறுதிச்சடங்கு நடந்தது.
அவரது குடும்பத்தினர் விருப்பப்படி, தேசிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தெற்கு பிளாசா பகுதியில் தேசியக் கவி காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்வில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸ் பங்கேற்றார்.
நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.