செய்திகள்

அசாமைப் போல் எல்லா மாநிலங்களிலும் குடிமக்கள் கணக்கெடுப்பு - மத்திய அரசு பரிசீலனை

Published On 2018-08-27 03:04 IST   |   Update On 2018-08-27 03:04:00 IST
அசாம் மாநிலத்தைப் போல், எல்லா மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #HomeMinistry #NRC
புதுடெல்லி:

அசாம் மாநிலத்தில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த மாநிலத்தின் உண்மையான குடிமக்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் இறுதி வரைவு பதிவேடு, சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.



அதில், அம்மாநிலத்தைச் சேர்ந்த 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருக்கிறது. உண்மையான நபர்களின் பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், பெயர் நீக்கம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, இந்த கணக்கெடுப்பு தொடங்கிய 2015-ம் ஆண்டில் இருந்து, அசாம் மாநிலத்தில் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், பூர்வகுடிக்கான ஆதாரம் இல்லாத ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் கட்டுமான பணிக்கு ஆட்கள் தேவைப்படும் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் சென்று இருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

இதை கருத்தில் கொண்டு, அசாமைப் போல், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்துவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இதுபற்றி அந்த அமைச்சக உயர் வட்டாரங்கள் கூறுகையில், “இத்தகைய கணக்கெடுப்பு நடத்துவதில் சிரமம் இருக்காது. இருப்பினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தன.  #HomeMinistry #NRC
Tags:    

Similar News