செய்திகள்
நிவாரணப்பொருட்களை திருடிய வி.ஏ.ஓ.க்கள். தினேசன், ‌ஷனிஷ்.

வயநாட்டில் வெள்ள நிவாரண பொருட்களை திருடிய 2 வி.ஏ.ஓ.க்கள் கைது

Published On 2018-08-25 10:12 IST   |   Update On 2018-08-25 10:12:00 IST
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முகாமில் இருந்து வெள்ள நிவாரண பொருட்களை திருடிய 2 வி.ஏ.ஓ.க்களை போலீசார் கைது செய்தனர். #KeralaFloodsRelief
கொழிஞ்சாம்பாறை:

கேரளாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை மாநிலத்தையே சின்னாபின்னமாக்கியது. வெள்ளத்தில் சிக்கி 370-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடு, உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

ரூ.20 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. கேரளாவுக்கு இந்தியா மட்டுமல்லாம் வெளிநாடுகளில் இருந்தும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். வெள்ள பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதால் பலர் இன்னும் நிவாரண முகாமிலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பனமரம் பகுதியில் சிறப்பு கிராம நிர்வாக அதிகாரியாக உள்ளவர் தினேசன் (வயது 42), உதவி அதிகாரி ‌ஷனிஷ் (41). இவர்கள் நேற்று ஒரு லாரியை எடுத்துக்கொண்டு முகாமுக்கு சென்றனர். முகாமில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணை, மிளகாய் உள்ளிட்டவைகள் குவிக்கப்பட்டிருந்தன.

இது தவிர ஓணம் திருவிழாவுக்காக கிப்ட் பொருட்களும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. லாரியில் சென்ற வி.ஏ.ஓ.க்கள் அங்கிருந்த உணவுப்பொருட்களை மூட்டை மூட்டையாக எடுத்து லாரியில் அவசர அவசரமாக ஏற்றினர். சந்தேகம் அடைந்த அங்கு தங்கிருந்த நபர் இதுகுறித்து கேட்டபோது வேறு முகாமிற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

அவர்களின் செயலில் மேலும் சந்தேகம் அந்த நபர் இது குறித்து மானந்தவாடி தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார். தாசில்தார் மானந்தவாடி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அங்கு வி.ஏ.ஓ.க்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் நிவாரண முகாமில் இருந்து லாரி மூலம் உணவுப்பொருட்கள் திருடியது தெரியவந்தது. உணவுப்பொருட்களை மீட்ட போலீசார் வி.ஏ.ஓ.க்கள் தினேசன், ‌ஷனிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இது குறித்து மானந்தவாடி தாசில்தார் கூறும்போது, முகாமில் உணவுப்பொருட்கள் திருடிய 2 வி.ஏ.ஓ.க்களையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டுள்ளேன். நிவாரண முகாமில் அரசு அதிகாரிகள் திருடினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்த அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் இன்று மானந்தவாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். #KeralaFloodsRelief
Tags:    

Similar News