செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தம்: மோடி, நிர்மலா சீதாராமனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் - காங்கிரஸ் வழங்க முடிவு

Published On 2018-07-23 19:13 GMT   |   Update On 2018-07-23 19:13 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்திருப்பதே காரணம் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.



பின்னர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து அதை மறைப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அரசு போர் விமானத்தின் விலையை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்க முடியாது. தலைமை கணக்காயர் மற்றும் நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வில் அம்பலமாகி விடும். இந்த ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தம் கொடுத்திருப்பது ஏன் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதற்கு இதுவே உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆனந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விவகாரம் குறித்து பதில் அளிக்கையில், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது குறித்து ஏன் என்பதை விளக்க வேண்டும். போர் விமான விலையை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்து இருக்கிறது. இதை ராகுல் காந்தியிடம், பிரான்ஸ் அதிபர் தெரிவித்து இருக்கிறார். அப்போது மன்மோகன் சிங், நான் (ஆனந்த் சர்மா) உள்ளிட்டோர் உடன் இருந்தோம் என்றார்.

பின்னர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, நாடாளுமன்றத்தில் போர் விமானம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை ஆகும். இருவருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் முடிவு எடுப்பார் என்றார்.  #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
Tags:    

Similar News