செய்திகள்

ரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்பு

Published On 2018-07-15 11:13 GMT   |   Update On 2018-07-15 11:13 GMT
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு படையினர் ரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் முதன்முறையாக பங்கேற்கின்றனர்.
புதுடெல்லி :

பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது.  

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில், இந்த அமைப்பில் உறுபினர்களாக உள்ள நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

மூன்று மாதம் நடைபெற உள்ள இந்த மெகா பயங்கரவாத ஒழிப்பு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ரஷியா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் போர் பயிற்சியில் இந்திய விமானப்படையை சேர்ந்த சுமார் 200 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News