செய்திகள்

பிளாஸ்டிக் தடையால் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு, 3 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்

Published On 2018-06-24 13:48 GMT   |   Update On 2018-06-24 14:03 GMT
மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று அமல்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தடையினால் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும், 3 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. #Maharastra #MaharastraPlasticban #Rs15kcroreloss

மும்பை:

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பொருட்களுக்கு மகராஷ்டிராவில் நேற்று (சனிக்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டது. அதன்படி கடைக்காரர்களும், பொது மக்களும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட கரண்டி, தகடுகள், பாட்டில்கள் மற்றும் தெர்மோகோல் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாலின்தீன் பைகளை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் ஏராளமான குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். நாளை முதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்க உள்ளது. முதல் தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் இரண்டாவது தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பிளாஸ்டிக் தடையால் பாத்திரத்தில் மீன் வாங்கி செல்லும் பெண்கள்

இந்நிலையில், இந்த பிளாஸ்டிக் தடையினால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்படையும் என பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தடையினால் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும், அந்த தொழிலை நம்பியிருக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த சங்கத்தின் தேசிய பொது செயலாளர் நீமித் புனமியா தெரிவித்துள்ளார். 

இதனால் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவதோடு, வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாது என பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மும்பை வியாபாரிகள் பாலிதீன் தடைக்கு மேலும் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால் மராட்டிய மாநில அரசு அதை ஏற்க மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Maharastra #MaharastraPlasticban #Rs15kcroreloss
Tags:    

Similar News