செய்திகள்

கடவுள் உயிர் கொடுப்பார் என நம்பி பெண்ணின் சடலத்தை புதைக்காமல் காத்திருந்த குடும்பம்

Published On 2018-06-12 10:38 GMT   |   Update On 2018-06-12 10:38 GMT
ஆந்திராவில் இறந்த பெண்ணுக்கு கடவுள் உயிர் கொடுப்பார் என்று நம்பி அவரது குடும்பத்தினர் மூன்று நாட்களாக சடலத்தை புதைக்காமல் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெட்டி குடம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, அந்த வீட்டில் வசித்து வந்த அருணா ஜோதி (வயது 41) என்ற பெண் இறந்து அழுகிய நிலையில் சடலம் கிடந்தது தெரியவந்தது. இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆனால், அருணா ஜோதி இறந்ததை ஒரு பொருட்டாக கருதாமல் அவரது தாயும், தம்பியும் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம், அருணா ஜோதி இறந்துவிட்டதாக கூறியும்  எந்த ரியாக்சனும் இல்லை. அருணா ஜோதியின் உயிரை கடவுள்தான் எடுத்தார், கடவுள் மறுபடியும் உயிர் கொடுப்பார் என்று இருவரும் கூலாக கூறியுள்ளனர்.

பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அருணா ஜோதி இறந்ததால், அவரது குடும்பத்தினரின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு இவர்களின் குடும்பம் வறுமையில் வாடியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பசியால் அருணா ஜோதி இறந்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. #AndhraSuperstition #FamilyKeepsBody
Tags:    

Similar News