செய்திகள்

மோடியின் தலைக்கணத்தால் தான் கூட்டணி கட்சிகளை பாஜக இழக்கிறது - சந்திரபாபு நாயுடு

Published On 2018-06-10 08:59 GMT   |   Update On 2018-06-10 08:59 GMT
கூட்டணி கட்சிகளை பாஜக இழப்பதற்கு பிரதமர் மோடியின் தலைக்கணமே காரணம் என ஆந்திர முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #AndhraCM #BJP
ஐதராபாத்:

ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு வரவுள்ள பொதுத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மோடியை விட அரசியலில் தான் மூத்தவர் என்றும் இருப்பினும் நான் மோடிக்கு மிகுந்த மரியாதை அளித்து வந்ததாகவும், ஆனால் மோடி அதனை உணரவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அவரது கூட்டணி கட்சிகளை நலிவடையச் செய்வதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், அதனை முறியடித்து தனித்து இயங்க முடியும் என்பதை உணர்த்தவே கூட்டணியை முறித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆந்திர மாநிலத்தின் நலனுக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்ததாகவும், ஆனால் அதனால் எவ்வித பயனும் இல்லாத நிலையில் ஏன் கூட்டணியை தொடர வேண்டும் எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2014 பொதுத்தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளும் அதன்பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் மக்களுக்கு கடும் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநிலங்களில் பாஜக இனி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும், பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், மத்தியில் 3-வது கட்சி ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆந்திர முதல்மந்திரி, 3-வது கட்சி ஆட்சியில் அமர்வது சுலபம் அல்ல. எனினும், பாஜகவுக்கு அந்த 3-வது கட்சி மிகப்பெரிய தலைவலியை நிச்சயம் உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, பிரதமர் மோடியின் தலைக்கணத்தின் காரணமாகத்தான் கூட்டணி கட்சிகளை பாஜக இழந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், தனித்து போட்டியிடப்போகும் தெலுங்கு தேசம் கட்சி நிச்சயம் பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் எனவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார். #AndhraCM #BJP
Tags:    

Similar News